இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை அன்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். மாநிலம் முழுவதும் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை www.trb.tn.nic.in வெளியிட்டது. மாநில பதிவு மூப்பு தகுதி அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஒரு பணியிடத்துக்கு 5 பேர் என்ற வீதத்தில் மொத்தம் 9,200 பேர் கொண்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் இடைநிலை ஆசிரியர் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தம் தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,743 ஆகும். அவர்களுக்கான சம்பள விகிதம் ரூ.5,200 - ரூ.20,200 ஆகும்.
இந்தப் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 26.5 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீதமும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 சதவீதமும், அருந்ததியினருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு இருக்கும். பொதுப்பிரிவில் 31 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அனைத்துப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் பணியிடங்களில் குறைந்தது 50 சதவீதம் பேர் பெண்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு மூப்புத் தகுதி இருந்தும் பட்டியலில் யாரேனும் விடுபட்டிருந்தால், அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து அவர்களது பதிவு மூ ப்பு தகுதிச் சான்றிதழையும், ஜாதி சான்றிதழையும் பெற வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் அவற்றைக் காண்பித்து விண்ணப்பங்களைப் பெறலாம்.
விண்ணப்பதாரர்கள் 01.07.2011 தேதியின்படி 57 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நவம்பர் 23-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் நவம்பர் 23-ம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 23-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் வழங்கப்பட வேண்டும்.
நடப்புக் கல்வியாண்டில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதுதவிர 20 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
