பண்டாரவாடை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் அமைதியான முறையில் சிறு சல சலப்புடன் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் M.கமருஜமான் மற்றும் T.அசோக் ஆகிய இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நமது ஊரில் சுமார் 4669 வாக்குகள் உள்ளன. இதில் பதிவானவை 2625 வாக்குகள். அதாவது 56% சதவீத வாக்குகள். மீதமுள்ள 2044 வாக்குகள் எங்கே?
வாக்காளர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருகிறார்களா? அல்லது தேர்தலை புறக்கணித்தார்களா? இரண்டுமே இல்லை. வாக்குப்பதிவு சுமார் காலை 7.00 மணியளவில் தொடங்கியது. மக்கள் அனைவரும் ஆவலோடு, தனது தலைவனை தேர்ந்தெடுக்க வாக்குச்சாவடிக்கு விரைந்தனர். அங்கே அவர்களுக்கு வேறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. அவர்களிடம் அடையாள அட்டை இருந்தது. வாக்காளர் பட்டியலில் பெயரும் இருந்தது.அதிகாரிகள் அவர்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை காரணம் அவர்கள் பெயர் வாக்காளர் நீக்கல் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.
உதாரணமாக அப்துல்லாஹ் என்பவருடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து, நீக்கல் பட்டியலிலும் இருந்தால் அவரால் வாக்களிக்க முடியாது. இப்படி பெரும்பாலான மக்கள் தவித்தனர்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள், வாக்களிக்க இயலாதவர்கள் என 500 பேர் இருந்தாலும் கூட மீதமுள்ள 1500 பேரின் பெயர் ஏன் நீக்கப்பட்டுள்ளது. இந்நாட்டில் நடைபெறும் அனைத்து தேர்தலிலும் தவறாமல் வாக்களிக்கும் பெயர்கள் கூட நீக்கப்பட்டுருந்தது.இது யாருடைய பிழை, எங்கே தவறு நடைபெற்றுள்ளது.
மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களை ஒதுக்கிவிட்டு வந்தும் வாக்களிக்க முடியாத அவல நிலையை காண முடிந்தது. மக்களில் சிலர் ஆவேசப்பட்டு அதிகாரியிடம் கேள்விமேல் கேள்வி எழுப்பினர் இருந்தும் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. இதற்கிடையில் உயர் அதிகாரிகள் வாக்குச்சாவடிக்கு விரைந்தனர். நிலைமையை சீராக்க புதிய பட்டியலை தொடருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதற்கு மற்றொரு வேட்பாளர் ஒற்றுக்கொள்ளததால் புதிய பட்டியலும் கைவிடப்பட்டது. இதனால் அங்கே கூச்சல் குழப்பம் நீடித்தது.
சுமார் மாலை 5.௦௦௦௦௦௦௦௦00 மணியுடன் வாக்குபதிவு முடிவடைந்தது. பதிவான மொத்த வாக்குகள் 2625. அதாவது 56% சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாயின. 12-01-2011 அன்று காலை 8.௦௦00 மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டு பிற்பகலில் முடிவு அறிவிக்கப்படும்.
நீக்கப்பட்டதற்கு அதிகாரிகள் கூறும் காரணங்கள் :
- வெளிநாட்டில் வசிப்பவர்களின் பெயர்கள்,
- குடும்ப பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ள பெயர்கள்,
- வெளியூரில் வசிப்பவர்களின் பெயர்கள்,
- அதிகாரிகள் கணக்கெடுப்பின் போது வீடுகள் பூட்டி இருந்தாலோ அல்லது வேறு வீட்டில் வசித்தாலோ அவர்கள் பெயர்கள் நீக்கப்படலாம் என்பது அதிகாரியின் கருத்து.
இவ்வாறு பல காரணங்கள் கூறினாலும் அதிகாரியின் பிழையே முதன்மையானது.இருப்பினும் நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை இத்தேர்தல் நமக்கு காட்டுகிறது.
அரசு வெளியிடும் வரைவு வாக்காளர் பட்டியலை நம்மில் சிலர் பார்ப்பதில்லை.அதிலே பெயர் நீக்கப்பட்டுருந்தால் அதை சரிசெய்ய முயசிப்பதில்லை.
இவ்வாறு நாம் அலட்சியமாக இருப்பதனால் நமது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களிலாவது நமது உரிமைகளை மீட்டெடுப்போம்! விழிப்புணர்வோடு இருப்போம்!!