தொகுதிக்கு போகாமலேயே தேர்தலில்வெற்றி பெற்றவரும்,எதிர் கட்சி தலைவர்களோடு மிக
நாகரிகமாக நட்பு பழகியவரும், காயிதே மில்லத்
என்று அன்போடு அழைக்கபட்ட முஸ்லிம் லீக்
தலைவர் முகம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களை தமிழக தேர்தல் நடக்க போகும் இத்தருணத்தில்நினைவு கூறுகிறோம்.
நாகரிகமாக நட்பு பழகியவரும், காயிதே மில்லத்
என்று அன்போடு அழைக்கபட்ட முஸ்லிம் லீக்
தலைவர் முகம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களை தமிழக தேர்தல் நடக்க போகும் இத்தருணத்தில்நினைவு கூறுகிறோம்.
இஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்' இஸ்மாயில் சாகிப் அவர்கள். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.
அன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர். அனைத்து கட்சியினரும் மதிக்க தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சி பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.
இத்தகைய பெருமைக்குரிய இஸ்மாயில் சாகிப் அவர்கள், திருநெல்வேலியை அடுத்த பேட்டை என்ற ஊரில் 1896 ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முஸ்லிம் மத தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இஸ்மாயில் சாகிப் அவர்கள் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயார்தான் அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார்.
திருநெல்வேலியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்ததும் திருச்சி ஜோசப் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920 ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றினார்.
1936 ம் ஆண்டு இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945 ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948 ம் ஆண்டு இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1946 முதல் 52 ம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1952 ம் ஆண்டு முதல் 58_ம் ஆண்டு வரை டெல்லி மேல்_சபை உறுப்பினராக பதவி வகித்தார்.
1962 ம் ஆண்டில் கேரளாவில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் 1967, 1971 தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். தொகுதிக்கு செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெற்றவர் இஸ்மாயில் சாகிப் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு தூரம் தொகுதி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.
இஸ்மாயில் சாகிப்பின் மனைவி பெயர் அமீதா பீவி. இவர் 1962ம் ஆண்டில் காலமானார். இஸ்மாயில் சாகிப்பின் ஒரே மகன் மியாகான் குறிபிடத்தக்கது .
"காயிதே மில்லத்" இஸ்மாயில் சாகிபு அவர்களுக்கு 1972 மார்ச் 25_ந் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர் யு.முகமது தலைமையில் 15 டாக்டர் கள் கொண்ட குழு சிகிச்சை அளித்தார்கள். உடல் மிகவும் மோசமானதால் டாக்டர்கள் இரவு பகலாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். 1972 ஏப்ரல் 4 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1_15 மணியளவில் இஸ்மாயில் சாகிப் அவர்கள் காலமாகிவிட்டார்கள். மரணம் அடைந்தபோது காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுக்கு வயது 76.
இஸ்மாயில் சாகிப் அவர்களின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து குரோம்பேட்டையில் உள்ள அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மறுநாள் (5_ந்தேதி) காலை பொதுமக்கள் பார்வைக்காக ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் புதுக்கல்லூரியில் உள்ள மசூதிக்கு இஸ்மாயில் சாகிப் அவர்களின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தொழுகை நடைபெற்றது. பின்னர் திருவல்லிக்கேணி ஐரோட்டில் உள்ள வாலாஜா மசூதியை அடைந்தது. அங்கு இஸ்மாயில் சாகிப் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம் முதலிய வெளி மாநிலங்களில் இருந்து வந்த முஸ்லிம் லீக் பிரமுகர்கள், பொதுமக்கள் என லட்சகனக்கானோர் கலந்து கொண்டனர்.
இஸ்மாயில் சாகிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு அங்கு இரங்கல் கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில் கூறியதாவது:-
"தனது 50 ஆண்டு கால வாழ்வில் 8 கோடி முஸ்லிம்களுக்காக உழைத்து பொற்கால மாக்கித் தந்தார். தமிழர்களுக்கு மட்டும் அல்ல _ இந்தியர்களுக்கும் அவர் மறைவு மாபெரும் இழப்பு. இஸ்மாயில் சாகிப் மனிதருள் மாமணி. அடக்கம், அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடம். இஸ்மாயில் சமூகத்துக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் நீண்ட நெடுங்கால தொடர்பு இருந்து வருகிறது.
எங்கள் அண்ணன் மறைவுக்கு பிறகு இஸ்மாயில் சாகிப் அண்ணனுக்கு அண்ணனாக திகழ்ந்தார். அவர் மறைந்து விட வில்லை. நெஞ்சத்தில் உறைந்து விட்டார். அவர் நம்மோடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளத்தில் இருக்கிறார்."
இவ்வாறு கருணாநிதி கூறினார்.டெல்லி பாராளுமன்றத்திலும், தமிழ்நாடு சட்டசபையிலும் அனுதாப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லா உறுப்பினர் களும் ஒரு நிமிடம் மவுனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்கள்.
நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் உழைத்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை என்றும் நினைவு கொள்வோம்.
நன்றி : எம்.குலாம் தஸ்தகீர்
சார்ஜா
சார்ஜா